பழநி மலைக்கோவிலில் நவீன நகரும் உண்டியல்!
பழநி : பழநி மலைக்கோவிலுக்கு, நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, நகரும் உண்டியல், நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அதிக வருமானமுள்ள பழநி மலைக் கோவிலுக்கு, மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில், நகரும் உண்டியல், நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதில், பொருத்தப்பட்டுள்ள சக்கரங்கள் உதவியுடன், நகர்த்திக்கொள்ளலாம். பிறர் நகர்த்தமுடியாத அளவிற்கு, உண்டியலை ’பிட்டிங்’ செய்ய முடியும். உண்டியல் நிறைந்தவுடன், அதில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் மூலம், காணிக்கையை கொட்டி, எண்ண முடியும். கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ’மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனத்தார், மதுரை மீனாட்சியம்மன் கோவில், பழநி கோவிலுக்கு நகரும் உண்டியலை நன்கொடையாக வழங்கிஉள்ளனர். வரும், நவ., 11ல், மலைக்கோவில் கொடிமரத்திற்கு அருகே, அந்த உண்டியல் வைக்கப்பட உள்ளது. இதன் உபயோகம் பொறுத்து, பிற இடங்களிலும், இவ்வகை உண்டியல்கள் வைக்க ஏற்பாடு செய்யப்படும்,’ என்றார்.