உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆந்திராவில் விமரிசையாக நம் கோவில் திட்டம்!

ஆந்திராவில் விமரிசையாக நம் கோவில் திட்டம்!

திருப்பதி: ஆந்திராவில், நேற்று, நம் கோவில் திட்டத்தின் கீழ், பூஜைகள் நடைபெற்றன. திருமலை திருப்பதி தேவஸ்தானமும், ஆந்திர மாநில அறநிலையத் துறையும் இணைந்து ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள, சுமார் 54,300 கோவில்களில், நம் கோவில் திட்டத்தின் கீழ் சிறப்பு பூஜைகளை நடத்தியது.

கோ பூஜை : இந்து சம்பிரதாயத்தை, வளர் இளம் தலைமுறையினருக்கு உணர்த்தவும்; அனைத்து கோவில்களிலும் ஆண்டுக்கு ஒருமுறை பூஜை நடக்க வேண்டும் என்பதற்காக, 2012ல், இத்திட்டம் துவங்கப்பட்டது. ஆண்டுக்கு இருமுறை, ஆடி மற்றும் கார்த்திகை மாத பவுர்ணமி தினங்களில், மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில், இந்த பூஜைகள் நடக்கிறது. இந்நிலையில் நேற்று, ஆந்திர காலெண்டர் படி கார்த்திகை பவுர்ணமி என்பதால், நம் கோவில் திட்டத்தின் கீழ் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டு, துளசி பூஜை, கோ பூஜை நடத்தி, அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு கங்கணங்களை பிரசாதமாக அளித்தனர். இம்முறை, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள, 200 கோவில்களில், நம் கோவில் திட்டத்தின் கீழ் இந்த பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும், ஆண்டுக்கு இருமுறை நடக்கும் இந்த பூஜையை, இனி ஆண்டுக்கு நான்கு முறை நடத்த, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

கருட சேவை : திருமலையில், மாதந்தோறும் பவுர்ணமியன்று கருட சேவை நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று மாலை, 7:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை, மலையப்ப சுவாமி கருடன் மேல், மாட வீதியில் வலம் வந்தார். மேலும், கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி, ஏழுமலையான் கோவில் முழுவதும், 1,008 நெய் தீபங்கள் ஏற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !