சபரிமலை கண்காணிப்பில் ஆளில்லா குட்டி விமானம்!
கம்பம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் சீசன் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஆளில்லா குட்டி விமானத்தை ஈடுபடுத்த, கேரள போலீசார் முடிவு செய்துள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோவிலை, தேசிய ஆன்மிக சின்னமாக அறிவிக்க, பிரதமர் நரேந்திர மோடி, நவ., 16ல், இங்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, நடப்பு சீசனில் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் கண்காணிப்பு பணிக்கென, ஆளில்லா குட்டி விமானத்தை பயன்படுத்த, கேரள போலீசார் முடிவு செய்துள்ளனர். போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியிலும், அந்த விமானம் ஈடுபத்தப்பட உள்ளதாக, கேரளா தென்மண்டல ஏ.டி.ஜி.பி., பதக்குமார் அறிவித்துள்ளார். கோவிலில் இந்த சீசனில் செய்ய வேண்டிய வசதிகள் மற்றும் பல்வேறு அம்சங்களை, உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா ஆய்வு செய்தார். சுகாதாரத்தை பேணிக்காக்க, 800 சுகாதார பணியாளர்களை ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு, மாரடைப்பால், 37 பேர் மரணமடைந்துள்ளனர். எனவே, இந்த ஆண்டு கூடுதல் ஆக்சிஜன் பார்லர்கள் அமைக்கவும், டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.