கோவில் நிலத்தை மீட்க முறையீடு
திருப்பூர் : "பல்லடத்தில், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள ரூ.40 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை மீட்க வேண்டும், என, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
மனுக்கள் விவரம்:
* மாநகராட்சி 56வது வார்டு பா.ஜ., நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "செல்லம் நகரில் உள்ள ரேஷன் கடையின் கீழ், ஆயிரத்துக்கும் அதிகமான கார்டுகள் உள்ளன. கண்டியம்மன் நகர், செல்லம் நகர் பகுதி கார்டுகளை இணைத்து, புதிய ரேஷன் கடை திறக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளனர்.
* பாரத் மக்கள் கட்சி சார்பில் கொடுத்த மனுவில், "பல்லடம் அருளானந்த ஈஸ்வரன் கோவிலுக்கு சொந்தமான 3.36 ஏக்கர் நிலம், ஆக்கிரமிப்பில் உள்ளது. 40 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
* தேவராயன்பாளையம் மக்கள் கொடுத்த மனுவில், "தேவராயம்பாளையத்தில், குடியிருப்புகளுக்கு அருகே கல்குவாரி செயல்படுகிறது. வெடிவைத்து பாறைகளை தகர்ப்பதால், வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. இடையூறாக உள்ள கல் குவாரியை மூட வேண்டும், என, தெரிவித்துள்ளனர்.
* வெங்கலப்பாளையம் விவசாயிகள் கொடுத்த மனுவில், "குவாரிகளில் வெடி வைத்து கற்கள் எடுப்பதால்,மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கிரஷர் மண்ணால் வீடுகள், விளைநிலங்கள் சேதமடைகின்றன. மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணை இன்றி இயங்குவதாக கூறப்படுகிறது. இசைவாணையை புதுப்பிக்காமல், பாறைக்குழியை மூட வேண்டும், என்று தெரிவித்துள்ளனர்.
* குன்னத்தூர், வெள்ளிரவெளி மக்கள் கொடுத்த மனுவில், "கவனம்தோட்டம் பகுதியில், 300க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த பொது குடிநீர் குழாயை, ஊராட்சி தலைவர் அகற்றியுள்ளார். மீண்டும் பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும், என, கேட்டு கொண்டுள்ளனர்.