அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்!
பொள்ளாச்சி : கார்த்திகை தீபத்தையொட்டி பொள்ளாச்சியில், அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகையை தொடர்ந்து, கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவையொட்டி, வீடுகளில், பெண்கள் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். கார்த்திகை தீபம் இந்தாண்டும் விமரிசையாக கொண்டாட மக்கள் தயராகி வருகின்றனர். பொள்ளாச்சி வடுகபாளையத்தில், கார்த்திகை தீப விளக்குகளின் அளவை பொறுத்து விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இது குறித்து விளக்குகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்காக கோதவாடி குளத்தை துார்வாரிய போது, அங்கிருந்து களிமண் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த மண் மூலம் தற்போது விளக்குகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பெரிய விளக்குகள் ஒரு டஜன் ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் கார்த்திகை பண்டிகை துவங்க சில நாட்களே உள்ளதால், தயாரிப்பு பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்தாண்டு உற்பத்தி அதிகரிப்பதுடன், விற்பனையும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்,’ என்றனர்.