டிச.6 சபரிமலையில் பாதுகாப்பு கவுண்டவுன் தொடக்கம்!
சபரிமலை: டிச.6ல் சபரிமலையில் செய்ய வேண்டிய பாதுகாப்பு பணிகளின் கவுண்டவுன் தொடங்கியது. மத்திய அதிவிரைவு படை போலீசார் சன்னிதானத்தின் முன்பு பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். சபரிமலையில் தற்போது மண்டல கால பூஜை நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டு ஏந்தி 18-ம் படியேறி தரிசனம் நடத்துகின்றனர். டிச.5,6,7 தேதிகளில் பாதுகாப்பு மிகவும் கடுமையாக்கப் படும். இந்த ஆண்டு மத்திய அதிவிரைவு படைபோலீசின் கோவை 105-வது பட்டாலியனை சேர்ந்த 156 வீரர்கள் இங்கு முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் சன்னிதானத்தின் முன்பு தடுப்பு ஏற்படுத்தி அதன் உள்ளே இருந்து கண்காணித்து வருகின்றனர். நேற்று இவர்கள் அவசர காலத்துக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அவசர கால லைட்டுகள், வடம், ஜெனரேட்டர்கள், மெகாபோன், அலாரம், பைப்புகள், ஸ்டிரெச்சர்கள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் போன்றவற்றை வைத்து ஒத்திகையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை பக்தர்கள் மத்தியில் பரப்பும் வகையில், துணை கமாண்டன்ட் எஸ்.எஸ். தேவ் தலைமையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.