திருமலை ஆகமத்தை மீறிவிட்டார்: தலைமை அர்ச்சகர் மீது புகார்!
திருப்பதி: திருமலையில், ஆகமத்தை மீறி, தலைமை அர்ச்சகர், முன்னாள் சபாநாயகருக்கு ஆசீர்வாதம் அளித்ததாக, வெளியான தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமலை ஏழுமலையான் கோவிலில், தலைமை அர்ச்சகராக இருப்போர், குறிப்பிட்ட ஆகமவிதிகளை கடைபிடிக்க வேண்டும். தற்போது, தலைமை அர்ச்சகராக பணிபுரியும் ரமண தீட்சிதர், அதை மீறியாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலைமை அர்ச்சகராக இருப்பவர், திருமலை மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில், யாருக்கும் ஆசிர்வாதம் வழங்கக் கூடாது என்பது விதி. நேற்று முன்தினம், ஆந்திரா முன்னாள் சபாநாயகர் சுரேஷ்ரெட்டி திருமலை வந்தார். நேற்று காலை, ஏழுமலையானை தரிசித்து விட்டு, மணிமஞ்சரி விருந்தினர் மாளிகையில் தங்கினார். அங்கு, அவரை தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் சந்தித்து, ஆசிர்வாதம் வழங்கியுள்ளார். இதன்மூலம், ரமணதீட்சிதர், வைகானச ஆகம விதியை மீறி விட்டதாக, பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு பதிலளித்த ரமணதீட்சிதர், நட்பு ரீதியாக, அவரை சந்திக்க சென்றேன். அவர், என் காலில் விழுந்ததால், ஆசிர்வாதம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, என, தெரிவித்து உள்ளார்.