தைப்பூச சக்தி மாலை இருமுடி விழா ஏற்பாடு தீவிரம்
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச சக்தி மாலை இருமுடி விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு, ஏராளமான வசதி கள் செய்யப்பட்டு வருகின்றன. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆதிபராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும், தைப்பூச சக்தி மாலை, இருமுடி விழா நடைபெறுவது வழக்கம்.
அன்னதான கூடம்: இந்த ஆண்டு, தைப்பூச சக்தி மாலை, இருமுடி விழா வரும் 10ம் தேதி துவங்கி, வரும் பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கு, இருமுடி அணிந்து வரும் பக்தர்களுக்கு, தினமும், பங்காரு அடிகளார் ஆசி வழங்குவார். பக்தர்கள் வசதிக்காக, சித்தர் பீட வளாகத்தில், புதிய அன்னதான கூடம் கட்டப்பட்டுள்ளது. இதில், ஒரே நேரத்தில் 5,000 பேர், சாப்பிட முடியும். இந்த கட்டடத்தை, கடந்த 1ம் தேதி, பங்காரு அடிகளார் திறந்து வைத்தார். மேலும், இருமுடி அணிந்து வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, 30 ஏக்கர் பரப்பள வில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு, கழிப்பறை, குடிநீர் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. விழா துவங்கும் நாள் முதல், முடியும் வரை ஏராளமான பக்தர்கள் வருவதால், அனைத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடம் செய்துள்ளது.
விரதம் துவக்கம்: இதற்கிடையில், தென் சென்னை, வட சென்னை மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க இளைஞர் அணியினர் மற்றும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் சார்பில், தாம்பரம் சானடோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில், பக்தர்களுக்கு தைப்பூச சக்தி மாலையை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் அணிவித்தார். 2,000 பக்தர்கள், மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். தொடர்ந்து, 3,000 பேருக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.