பரமக்குடி கோயில்களில்கார்த்திகை தீப திருவிழா!
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனைத்து கோயில்களிலும் கார்த்திகை தீபத்திருவிழா நடந்தது. பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் காலை 10:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகரசுவாமி, ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்தார். தொடர்ந்து 7:00 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு தீபாராதனையுடன், மாலையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தரைப்பாலம், ஐந்துமுனை ரோடு, காந்திஜி ரோடு என அனைத்து பகுதிகளிலும் உள்ள கோயில்களில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில், சவுந்தர்யநாயகி சமேத நாகநாத சுவாமி, கோயில் முன் உள்ள சந்தியா வந்தன மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து, வாண வேடிக்கைகள் முழங்க, தொடர்ந்து 3 நாட்கள் தீபஒளி காட்சி தரும் வகையில் "மகா நாக தீபம் ஏற்றப்பட்டது. நகரில் அனைத்து வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் தீபம் ஏற்றி வழிபட்டனர்.