கார்த்திகை தீப திருவிழா கோலாகலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு!
சேலம்:சேலம் மாவட்டத்தில், நேற்று கார்த்திகை தீப திருவிழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, வீடுகளில் விளக்கேற்றி, கோவில்களுக்கு சென்று, பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்துவது வழக்கம். சேலம் மாநகர பகுதி முழுவதும், நேற்று பெண்கள், வீட்டு வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றியும், தீப திருநாளை வரவேற்றனர். சிறுவர்கள், இளைஞர்கள் பட்டாசு வெடித்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, இரவு, 7 மணிக்கு, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். அரியானூரில் உள்ள, 1,008 சிவாலயம், சேலம் காசி விஸ்வநாதர் கோவில், அம்பலவானர் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் தீபம் ஏற்றப்பட்டது.ஊத்துமலை முருகன் கோவில், கந்தாஸ்ரமம், ஃபேர்லாண்ட்ஸ் முருகன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்டவற்றிலும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. சிவன் கோவில்களில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.சேலம் செரிரோட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில், 1,008 விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.