ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் ஐந்து நாட்களுக்கு நிற்கும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்!
திருச்சி:வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி வரும், 29 ம் தேதி முதல் ஜனவரி மாதம், 5 ம் தேதி வரை, வைகை எக்ஸ்பிரஸ் ரயில், ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதிக்கு அடுத்தபடியாக, தமிழகத்திலுள்ள வைணவ தளங்களில் சிறப்பு பெற்றது, முதலாது திவ்யதேசமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகும். நாள்தோறும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துசெல்லும் கோவிலாகும்.
இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது, வெளிமாநிலம், மாவட்டத்தை சேர்ந்த, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம்.இதையடுத்து பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக, தங்கும் இடம், அடிப்படை வசதிகள், உணவுக்கூடங்கள், பாதுகாப்பு உள்ளிட்வைகள் குறித்து, இரண்டு நாட்களுக்கு முன்பாக, மாவட்ட நிர்வாகம் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.தற்போது கோவிலில், 10.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து வருவதால், நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசிக்கு சுமார் இரண்டு லட்சம்பேர் தரிசனத்துக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம், ஸ்ரீரங்கத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்க முடிவுசெய்துள்ளனர். இதனிடையே, தென்னக ரயில்வே நிர்வாகம், வைகுண்ட ஏகாதசிக்கு பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு; சென்னையில் இருந்து, மதுரை செல்லும், வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12635) மாலை, 6.02 மணிக்கு, ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து, ஒரு நிமிடம் நின்று, 6.03 மணிக்கு புறப்பட்டு செல்லும். எதிர்மார்க்கத்தில், மதுரையில் இருந்து சென்னை செல்லும், வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12636) காலை, 9.17 மணிக்கு வந்து, ஒரு நிமிடம் நின்று விட்டு, 9.18 மணிக்கு புறப்பட்டு செல்லும்.வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும், 29ம் தேதி முதல், ஜனவரி மாதம் 5 ம் தேதி வரை, ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷனில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.