"பக்தியை சொல்லிக் கொடுங்க!
திருப்பூர் : ""பக்தி, இதிகாசங்கள் மீது குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தினால், அவர்கள் தவறான வழிக்குச் செல்ல வாய்ப்பில்லை, என, சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேசினார்.
திருப்பூர் ஐயப்பன் கோவிலில், 55ம் ஆண்டு மண்டல பூஜை நடந்து வருகிறது. இதையொட்டி, "மகாபாரத கதாபாத்திரங்கள் என்ற தலைப்பில் நாகை முகுந்தனின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.
அவர் பேசியதாவது: சாபமே, சபதம் ஆன வரலாறு மகாபாரதத்தில் உள்ளது. இது, இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும்; வாழ்வியல் வெற்றிக்கான ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தரும் புராணமாகும். பெற்றவர்களை மதிக்க வேண்டும்; பெற்ற தந்தைக்காக துறவற வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவர் பீஷ்மர். அவருக்கு ரிஷிகள் சாபம் கொடுத்தனர்; அதை, தந்தைக்கான சபதமாக ஏற்றார். அம்பு படுக்கையில் படுத்துக் கொண்டு, உத்ராயண காலத்தை எதிர்நோக்கி காத்துக் கிடந்தார். பீஷ்மர் என்றால், பயங்கரமான சபதத்தை ஏற்றுக் கொண்டவர் என பொருள். தற்காலத்தில், பெற்றோரை கவனிக்க ஆளில்லை; முதியோர் இல்லம் தேடிச்செல்ல வேண்டியுள்ளது. பெற்றோரை நன்கு கவனித்துக் கொண்டாலே வளம் பெறலாம். முருகனை தமிழ் கடவுள் என்கிறோம். ஆறுமுகத்தில் 12 கண்கள் மெய் எழுத்தாகவும், கைகள் 18 மெய் எழுத்தாகவும், வேல் ஆயுத எழுத்தாகவும் கொண்டதால், தமிழ் கடவுளாக அழைக்கிறோம். மனிதன் ஏதாவது ஒரு கர்மத்தை செய்ய வேண்டும். நல்லது செய்தால் நல்லது; கெட்டது செய்தால், அதற்கான மறு பிறவி கிடைக்கும்.இன்றைய இளைஞர்கள் பக்தியிலும், கலாசாரத்தில் இருந்தும் தடம் மாறுவதற்கு பெற்றோரும், சமுதாயமும், அவர்களுக்குரிய வழியை காட்டாததே காரணம். சினிமா, "டிவி என ஒவ்வொரு குடும்பமும் தனித்தனி தீவாக உள்ளது. பணத்தை நோக்கிச் செல்லும் வாழ்க்கையாகி விட்டது. குழந்தைகளிடம் பக்தியை வளர்க்க வேண்டும். இலக்கியங்கள், இதிகாசங்கள் மீது சிறு வயது முதலே ஆர்வத்தை ஏற்படுத்தினால், அவர்கள் தவறான வழிக்குச் செல்ல மாட்டார்கள். இவ்வாறு, அவர் பேசினார்.