கோவில்கள் நசியாமல் காக்க திடமான அணுகுமுறை தேவை!
தமிழகத்தின் பல கோவில்களில், தங்கத் தேர் இழுத்தலும், சிறப்பு, யாக ஹோமங்களும் நடக்கின்றன. இதே போல மசூதிகளிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும், சிறப்பு தொழுகைகளை, அ.தி.மு.க.,வினர் ஏற்பாடு செய்து நடத்துகின்றனர். இது, தங்களது கட்சித் தலைவர் சந்தித்த சிக்கலில் இருந்து விடுபட, மேற்கொள்ளப்படும் தினசரி முயற்சியாகும். இந்த நாட்டில், பரிகார வழிபாடுகள் காலம் காலமாக உள்ளவை. நாத்திகம் பேசுவோர், இதை வெளிப்படையாக செய்யத் தயங்குவர். இதற்கு மக்கள் ஆதரவு தருகின்றனர் என்ற காரணத்திற்காக, இதற்கும், ஓட்டு அரசியலுக்கும் அதிக தொடர்பு இருக்க வாய்ப்பில்லை.
அதே சமயம், நம் நாட்டின் பழம் பெரும் புராணங்களை பார்த்தால், மன்னர்கள் தாங்கள் நலமாக இருக்கும் நேரத்தில், மக்கள் சிறப்பாக வாழவும், சிக்கலில் மாட்டிக் கொண்டால், அதில் இருந்து மீளவும், இம்மாதிரி செயல்களில் ஈடுபட்டது உண்டு. இது ஒரு புறம் இருக்க, இந்த நேரத்தில் தமிழக அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், சட்டசபை கூடும் முன், தன் அமைச்சக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
கையகப்படுத்தப்பட்ட கோவில் நிலங்கள் மீட்பு, கோவில்களில் தினசரி வழிபாடு முறையாக நடக்க ஏற்பாடு, நலிவடைந்த கோவில்கள் சீரமைப்பு, ஒவ்வொரு கோவிலுக்கும், 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி, பூசாரிகளுக்கு மாதந்தோறும் உதவி என்று, ஏகப்பட்டவிஷயங்களை அதில் விளக்கியிருக்கிறார்.
தமிழகத்தில், 500 ஆண்டுகளுக்கு முன்புள்ள கோவில்கள், அதற்குப் பின் உருவான கோவில்கள், பரம்பரை அறங்காவலர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய கோவில்கள், கிராம தேவதை கோவில்கள் என்று பல உள்ளன. ஸ்ரீரங்கம், மதுரை, பழநி, மயிலை போன்ற கோவில்களில், வருமானம் அதிகம் இருப்பதால், அதில் கிடைக்கும் கூடுதல் பணம், கோடிக்கணக்கில் மற்ற கோவில்களின் செலவினத்திற்கு, அறநிலையத் துறை பயன்படுத்து கிறது. கிராமங்களில் உள்ள புராதன கோவில்களில் கூட, நித்திய வழிபாட்டுக்குரிய தேவைகள் அதிகம் இருந்தும், அவற்றை கவனிப்பார் இல்லை.
கோவில் திருவிழா நேரத்தில், அப்பகுதி மக்கள், அதற்கான ஆர்வத்தை அதிகம் காட்டுவதால், அவை ஓரளவு நடக்கின்றன. இவற்றில் தற்போது, விசேஷ நாட்களில் வரும் மக்கள் கூட்டம், அதிகரித்து வருகிறது. ஆனால், காலம் காலமாக உள்ள சைவ, வைணவ கோவில்களில், அன்னதான திட்டத்திற்கு உள்ள முக்கியத்துவம், மற்ற தினசரி நிகழ்ச்சிகளுக்கு இல்லை. அறநிலையத் துறை, தன் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் சீரமைப்பு நடந்ததை, பொருளாதார அடிப்படையில் விளக்கி, தகவல் தெரிவித்தால் நல்லது. அதனால் பல விஷயங்கள் தெளிவாகும். அங்கொன்றும், இங்கொன்றும் எடுக்கப்படும் நடவடிக்கை சரியாகாது. அ.தி.மு.க..,வினரும், இம்மாதிரி கோவில்களுக்கு, சட்ட அடிப்படையில், லட்சக்கணக்கான நிதியை நிரந்தரமாக தந்து, அன்றாட நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தும் நடைமுறைகளை ஏற்படுத்தினால் கூட, நல்ல முயற்சியாக அமையும். கடந்த ஆறு மாதங்களில், கோவில் வருவாய் அதிகரித்திருக்கிறதா, கும்பாபிஷேக திருப்பணிகள் அரசியல் தலையீடு இன்றி நடந்திருக்கிறதா, கோவில் நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் பட்டியல் முழுவதும் வெளியிடப்பட்டதா என்பதை, அறநிலையத் துறை தனி அறிக்கையாக தெரிவிக்கலாம்.
ஏனெனில், கடந்த சில மாதங்களாக, தமிழகத்தில், தெய்வீக சுற்றுலா அதிகரித்திருப்பதாக, தகவல்கள் கூறுகின்றன. இதை பயன்படுத்தி, கோவில்கள் மீண்டும் பொலிவு பெற, அரசு திட்டங்களை அறிவித்தால் நல்லது.