கன்னியாகுமரியில் திருப்பதி கோயில்கட்டுமான பணி தொடக்கம்!
நாகர்கோவில்:முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் திருப்பதி கோயில் கட்டுமான பணி தொடங்கியது. ஒரு ஆண்டுக்குள் கோயில் கட்டிமுடித்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவுக்குள் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் திருப்பதி கோயில் கட்டுவதற்கு ரூ.22.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமிபூஜை அண்மையில் நடந்தது. நேற்று காலையில் கட்டுமான பணிகள் தொடங்கின.மூலவர் சிலை அமையும் இடத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. 45 அடி உயர கொடி மரம், 53 அடி உயர கோபுரத்துடன் வெங்கடாஜலபதி மூலவர் கோயில் கட்டப்படுகிறது. கோயிலுக்குள் மட்டும் ரூ.11.50 கோடி செலவிடப்படும். பத்மாவதிதாயார், கருடபகவான், ஸ்ரீதேவி, பூதேவி, புஷ்கரணி சன்னதிகளும் இங்கு அமைய உள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான துணை செயற்பொறியாளர் பார்த்தசாரதி, உதவி பொறியாளர் அமர்நாத்ரெட்டி, விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி சின்னசாமி, மக்கள் தொடர்பு அதிகாரி ரகுநாதன்நாயர் கலந்து கொண்டனர்.