பாலதண்டாயுதபாணி கோவில்சனிப்பெயர்ச்சி கோலாகலம்
மோகனூர்:காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில், டிசம்பர், 16ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடக்கிறது. மோகனூரில், பிரசித்தி பெற்ற காந்தமலை பாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, டிசம்பர், 16ம் தேதி, மதியம், 2 மணிக்கு, சனி பகவான், துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். அதை தொடர்ந்து, பாலதண்டாயுதபாணி கோவிலில், சங்காபிஷேகமும், யாக வேள்வியும் சிறப்பாக நடக்கிறது. அன்று காலை, 8.30 மணிக்கு, மகா கணபதி வழிபாடு, யஜமான சங்கல்பம், புண்யாகமும் நடக்கிறது. தொடர்ந்து, சனீஸ்வரர் கலச ஆவாஹனம், ஜப பாராயணம், பரிகார சாந்தி ஹோமம் நடக்கிறது.மதியம், 1.30 மணிக்கு, ஸ்வாமிக்கு அபிஷேகம், 2.44 மணிக்கு கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும் நடக்கிறது. சனிப்பெயர்ச்சியில், மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.