கோயில் கும்பாபிஷேகங்கள்
பரமக்குடி : பரமக்குடி, முதுகுளத்தூர், கீழக்கரை ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. பரமக்குடி ஆற்றுப்பாலம் அருகில் அரசமரத்தடியில் உள்ள ஸ்ரீசங்கர விநாயகர், வாழைத்தோப்பு முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நடந்த மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு டிச., 9 ல் மாலை 5:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு, அனுக்கை, கணபதி பூஜை, யாக சாலை பூஜை நடந்தன. நேற்று காலை 7:00 மணி முதல் கோபூஜை, இரண்டாம் கால யாகபூஜை முடிந்து , பகல்11.15 மணிக்கு கோயில் விமானங்களுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தை ஈஸ்வரன் கோயில் கட்டியப்பா குருக்கள் நடத்தி வைத்தார். பரமக்குடி பிராமண சமாஜம், சங்கர விநாயகர் இளைஞர் மன்றம் மற்றும் விழா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.
* பத்திரகாளியம்மன் கோயில்: கீழக்கரை அருகே மாவிலாதோப்பு கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, காலை 9:30 மணிக்கு மேல் வேதமந்திரங்கள் முழங்க, திண்டுக்கல் சவுந்திரராஜன் பட்டர் தலைமையில் கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து பத்திர காளியம்மன் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மாவிலாதோப்பு நாடார் உறவின்முறை சங்க நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
* முதுகுளத்தூர் அருகே அலங்கானூர் முனியப்பசாமி கோயிலில் நேற்று கணபதி ஹோமம், கோமாதா பூஜை உட்பட 6 கால யாக பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடந்தது. விளையாட்டு துறை அமைச்சர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். அ.தி.மு.க.,மாவட்ட செயலாளர் தர்மர், அலங்கானூர் ஊராட்சி தலைவர் பொன்னரியாள் முன்னிலை வகித்தனர். விழாவில் அன்னதானம், நாடகம் நடந்தது. நிகழ்ச்சியில் அலங்கானூர் ஜமாத் தலைவர் அலிஅக்பர், தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் அரக்காசு உட்பட பலர் பங்கேற்றனர்.