உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேகத்துக்காக காத்திருக்கும் வேணுகோபாலசுவாமி கோவில்!

கும்பாபிஷேகத்துக்காக காத்திருக்கும் வேணுகோபாலசுவாமி கோவில்!

கோவை:கோவையில் பழமையான பிரசித்தபெற்ற வேணுகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகத்திற்காக காத்திருக்கிறது.கோவை மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், 3,200 கோவில்கள் உள்ளன. இதில் பட்டியல் வகையை சேர்ந்தவை, 1,400. இக்கோவில்கள் மற்றும் சொத்துக்கள் வாயிலாக, அறநிலையத்துறைக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது.சைவ மற்றும் வைண கோவில்களுக்கு, 12 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் கும்பாபிஷேகம் பெரும்பாலான கோவிலில் நடத்தப்படாமல் காலம் கடத்தப்படுகிறது. ஆனால், கோவிலின் வாயிலாக கிடைக்கும் வருவாய் மட்டும், அறநிலையத்துறை வங்கிக்கணக்கில் தடைபடாமல் போய் சேருகிறது.

கோவை சலிவன் வீதியில் பிரசித்தி பெற்ற பழமையான வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், 1997ம் ஆண்டு விமரிசையாக நடத்தப்பட்டது. 12 ஆண்டுகள் கழித்து 2009ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்திருக்க வேண்டும். அறநிலையத்துறையோ, மாவட்ட நிர்வாகமோ இக்கோவிலை பற்றி கவலை கொள்ளவில்லை. கும்பாபிஷேகம் செய்து, 16 ஆண்டுகள் கடந்த நிலையில், கோவிலில் மராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், கல்மண்டபத்தில் மழைநீர் ஒழுகுகிறது. அர்த்தமண்டபம், மகாமண்டபத்திலுள்ள பெரும்பாலான பகுதிகளில், கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. கோவில் ராஜகோபுரத்தில் பெரும்பாலான சுவாமி சிற்பங்கள் சிதிலமடைந்துள்ளன. இவற்றுக்கு மராமத்துப்பணிகள் மேற்கொண்டு, சிற்பங்களுக்கு பஞ்சவர்ணங்கள் தீட்டப்படவேண்டும் என்பது கோவிலுக்கு வரும் பக்தர்களின் நீண்டநாள் வேண்டுகோள். ஆனால், அதை கோவில் நிர்வாகமும் சரி. அறநிலையத்துறையும் சரி, செவிமடுப்பதில்லை.கோவிலில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், தெப்பக்குளம், உள்பிரகாரம், வெளிபிரகாரம் ஆகியவற்றில் ஏராளமான கற்பணிகளும், சுதைப்பணிகளும் உள்ளன. இது தவிர, கோவில் திருக்குளத்தை துார்வாரி, அதில் தண்ணீர்விடவேண்டும்; கோவிலில் புதியதாக, ’வயரிங்’ செய்யவேண்டும். அழகிய வர்ணச்சாந்துகளை பூசுதல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் உள்ளன. இதைபற்றி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலமுறை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டனர். ஆனால், நடவடிக்கை எதுவும் இல்லை.

அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ’கோவில் வருவாய், கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள், எந்த அளவுக்கு பிரபலமான கோவில், திருப்பணிக்கு உபயம் கிடைக்குமா என்பது குறித்து அலசி, ஆராய்ந்து, அதன் பின்பே திருப்பணிகளை துவக்கவும், கும்பாபிஷேகம் செய்யவும், அறநிலையத்துறை முடிவு செய்யும். உயர் அதிகாரிகள் வசம் கோவிலின் நிலை குறித்தும், கும்பாபிஷேகம் செய்யும் நாள் கடந்து, நான்கு ஆண்டுகளாவது குறித்தும் தெரிவித்திருக்கிறோம். விரைவில், திருப்பணிகள் துவங்கப்படும்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !