உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் ஆண்டிற்கு ரூ.25 கோடி விற்பனை!

பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் ஆண்டிற்கு ரூ.25 கோடி விற்பனை!

பழநி :பழநி மலைக்கோயில் விற்பனை ஸ்டால்களில் ஆண்டிற்கு ரூ.25 கோடி வரை பஞ்சாமிர்தம் விற்பனைசெய்யப்படுகிறது. இ.,பில் மூலம் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் வழங்கும் புதிய முறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. பழநிகோயில் நிர்வாகம் சார்பில் மலைக்கோயில், பஸ் ஸ்டாண்ட், அடிவாரம் உட்பட 12 இடங்களில் பஞ்சாமிர்தம் அரைக்கிலோ டப்பா, டின்கள், கிப்ட் பாக்ஸ்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மலைக்கோயிலில் 4 ஸ்டால் உள்ளபோதும் பக்தர்கள் மொத்தமாக ஒரே ஸ்டாலில் குவிந்து விடுவதால் பஞ்சாமிர்தம் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக கோயில் நிர்வாகம் மூலம் ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள இ.,பில் மிஷின்கள் வாங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பக்தர்களுக்கு ரசீது வழங்கி மலைக்கோயிலில் உள்ள எந்த ஸ்டாலில் வேண்டுமானாலும் கொடுத்து பஞ்சாமிர்தம் வாங்கிக் கொள்ளலாம். மேலும் கோயில் அதிகாரிகள் அன்றைய பஞ்சாமிர்தம் விற்பனை தொகை, மற்றும் இருப்புவிபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2013-2014 ம் ஆண்டில் ரூ.25 கோடி வரை பஞ்சாமிர்தம் விற்பனையாகி உள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சியில் இணைஆணையர் (பொ) ராஜமாணிக்கம் மற்றும் கோயில் அதிகாரிகள் பங்கேற்றனர். கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில்,‘ முதல் கட்டமாக மலைக்கோயிலில் பக்தர்களுக்கு இ.,பில் மூலம் பஞ்சாமிர்தம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் உபயோகத்தை பொறுத்து மற்ற இடங்களிலும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !