அன்னதானம் நடத்துவதற்கு பணம் வசூலிக்க கேரள ஐகோர்ட் தடை!
சபரிமலை சபரிமலையில் அன்னதானம் நடத்தும் அமைப்புகளிடம் இருந்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு பணம் வசூல் செய்வதற்கு கேரள ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சபரிமலையில் அன்னதானம் நடத்துவதை பக்தர்கள் ஒரு சேவையாக கருதுகின்றனர். அன்னதான சேவை ஐயப்ப சேவை என்று நம்பப்படுகிறது. இதனால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பக்தர்கள் ஒரு அமைப்பை உருவாக்கி சபரிமலையில் வந்து அன்னதானம் நடத்தி செல்வர். முழுக்க முழுக்க அந்த அமைப்பின் செலவிலேயே அன்னதானம் நடைபெறும். தேவசம்போர்டில் இருந்து தண்ணீர் மட்டும் பெற்றுக்கொள்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக அன்னதானம் நடத்த வேண்டுமெனில் அந்த அமைப்புகள் தேவசம்போர்டுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, ஒரு நாள் அன்னதானம் நடத்த 10 ஆயிரம் ரூபாய் தேவசம்போர்டுக்கு செலுத்த வேண்டும். மகரவிளக்கு காலத்தில் ஐந்து நாட்கள் தினமும் ஒரு லட்சம் செலுத்த வேண்டும். இதற்கும் மேல் கிளீனிங் சார்ஜ் வசூலிக்கப்படும். மட்டுமல்லாமல் டிப்பாசிட் என ஒரு பெரிய தொகையும் கட்டி வைக்க வேண்டும். இதனால் சபரிமலையில் அன்னதானம் நடத்தும் ஆர்வம் குறைந்தது. ஓட்டல்கள் வியாபாரம் களைகட்டியது. தேவசம்போர்டின் இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு பதிவு பெற்ற அன்னதான அமைப்புகள் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சபரிமலை பெஞ்ச், தேவசம்போர்டுக்கு எவ்வித செலவும் இல்லாமல் நடத்தப்படும் அன்னதானத்துக்கு எதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பி, அன்னதான கட்டணம் வசூலிப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.