உள்ளூர் செய்திகள்

ஆண்டாள் ஆறு!

இந்தியாவில் சோணா, துங்கபத்ரா, சரஸ்வதி, கங்கை, கோதாவரி, நர்மதா, என்று பல நதிகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், ஆண்டாள் ஆறு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா! நீங்கள் படித்த மேற்கண்ட நதிகளுடன், வானுலகில் ஓடும் விரஜா என்னும்நதியின் குணங்களையும் கொண்டவள் ஆண்டாள். ஆம்...அவள் ஒரு கூட்டு நதி. சோணா நதி சிவந்த நீரையுடையது. அதுபோல், திருமாலின் கண்கள் சிவந்தவை என நமக்கு எடுத்துச் சொல்கிறாள் ஆண்டாள்.துங்கா, பத்ரா என்ற நதிகள் இணைந்ததே துங்கபத்ரா. இரண்டு நதிகளுமே மங்களகரமானவை. பத்ரம் என்றாலே மங்களம் தான். ஆண்டாள் பாடிய திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் மங்களகரமானவை தான். கங்கை நதி பாவங்களைக் களைவது. திருப்பாவை பாடினாலும் பாவங்கள் தொலையும். யமுனா கம்பீரமாக ஓடுவது.ஆண்டாளின் 143 பாடல்களும் கம்பீரமானவை. கோதவரி விசாலமானது. திருப்பாவையைப் பாடினால் பரந்த மனநிலை உண்டாகும். சரஸ்வதி பெரும் வெள்ளத்துடன் அறுபடாமல் ஓடுவது. ஆண்டாளின் பாடல்களும் திருமாலின் கடாட்சத்தை தடையின்றி பெற்றுத் தரும். நர்மதையை நினைத்தால் விஷ ஜந்துக்கள் அண்டாது. ஆண்டாளின் அருள் இருந்தால், இந்த உலக பந்தங்கள் நம்மை அண்டாது. அமிர்தத்தால் ஆன விரஜா நதியால் சூழப்பட்டது நாராயணன் வாழும் ஸ்ரீவைகுண்டம். அது நிலையான வாழ்வைத் தரும். திருப்பாவை பாடல்களும் நம்மை நித்ய இன்பமான லோகத்துக்கு அழைத்துச் செல்லும். எனவே ஆண்டாளை நதிக்கு ஒப்பிடுகிறார் சுவாமி தேசிகன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !