உங்கள் பணம் பாலா! ரத்தமா!
மகான் குருநானக் திருத்தல யாத்திரை சென்றார். இரவு நேரத்தில் கிராமங்களில் தங்கிச் செல்வது வழக்கம். ஒருநாள் கிராமம் ஒன்றில் தங்கியிருந்த போது, அங்கு பலரும் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதத்தில்அவருக்கு காணிக்கை அளித்தனர். ஏழை ஒருவர் சோள மாவு ரொட்டியை அவருக்கு வழங்கி வணங்கினார். ஜமீன்தார் ஒருவரும் குருநானக்கை காண வந்தார். அவருடைய பணியாட்கள் அறுசுவை உணவும், பழங்களும் கூடைகளில் கொண்டு வந்திருந்தனர். குருநானக் ஜமீன்தாரின் பழத்தையோ, உணவையோ திரும்பிக் கூட பார்க்காமல், ஏழை அளித்த காய்ந்து போன சோள ரொட்டியை சுவைத்து மகிழ்ந்தார். இதைக் கண்ட ஜமீன்தார், தன்னை குருநானக் அலட்சியம் செய்து விட்டதாகக் கருதி வருந்தினார். தன்னைப் புறக்கணித்தது ஏன் என குருநானக்கிடம் கேட்டு விட முடிவு செய்தார். ஜமீன்தாரின் முகக்குறிப்பை வைத்தே, அவரது உணர்வைப் புரிந்து கொண்ட குருநானக், தான் சாப்பிட்ட சோள ரொட்டியின் சிறு மிச்சத்தையும், ஜமீன்தார் கொண்டு வந்த உணவையும் தரையில் பிழிந்து விட்டார். சோள ரொட்டியில் இருந்து பாலும், ஜமீன்தாரின் உணவில் இருந்து ரத்தமும் வெளிப்பட்டது. அன்பரே! உழைப்பால் பெற்ற உணவே மேலானது. அதைச் சாப்பிடுவதால் உடலோடு உள்ளமும் துõய்மை பெறுகிறது. ஆனால், உன்னைப் போன்ற பணக்காரர்கள், வேலைக்காரர்களின் ரத்தத்தை சுண்டி இழுக்கும் வகையில் வேலை வாங்கி, உரிய கூலி கூட தராமல் விட்டு விடுகிறீர்கள். மேலும், உழைப்பவர்களைத் துன்புறுத்துகிறீர்கள். அவ்வாறு சேர்த்த செல்வம் இழிவானது. அந்த செல்வத்தில் சமைத்தது அறுசுவை உணவாக இருந்தாலும், அதை உண்பதால் தீய எண்ணமே உண்டாகும். இதனால் தான் அதைச் சாப்பிடுவதை தவிர்த்தேன், என்றார். இனி பணியாளர்கள் மட்டுமல்ல! எல்லாரிடமுமே மனிதநேயத்துடன் நடந்து கொள்வேன், என்று உறுதியளித்த ஜமீன்தார் குருநானக்கை வணங்கி புறப்பட்டார்.