வேலூர் சிம்ம குளத்தில் குழந்தை வரம் வேண்டி புனித நீராடிய பெண்கள்!
வேலூர்: விரிஞ்சிபுரம் சிம்மகுளத்தில், குழந்தை வரம் வேண்டி, நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பெண்கள் புனித நீராடினர். வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோவில் புகழ் பெற்ற தலங்களில் ஒன்று. கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்புவாக தோன்றியது. ஆயிரம் ஆண்டு பழமையானது.
இந்த கோவிலில் உள்ள சிம்ம குளத்தை, ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்ததாக புராணம் கூறுகிறது. தீர்த்த குளத்தில் கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு திறக்ப்படும். இந்த குளத்தில் குளித்தால் குழந்தை பேறு கிடைக்கும், பேய், பிசாசு, பில்லி சூன்யம் பிடித்தவர்களுக்கு குணமாகும் என்பது ஐதீகம். இந்தாண்டு கார்த்திகை கடைசி சனிக்கிழமை நேற்று முன்தினம், நள்ளிரவு 12 மணிக்கு சிம்மகுளம் திறக்கப்பட்டது.
ரத்தினகிரி பால முருகனடிமை சுவாமிகள் குளத்தை திறந்து வைத்தார். ஆயிரக்கணக்கான பெண்கள் சிம்ம குளத்தில் புனித நீராடினர். பின்னர் கோவில் பிரகாரத்தில் ஈரத்துணியுடன் படுத்தனர். வேலூர், திருவண்ணாமலை, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். விழாவில், கலவை சச்சிதானந்த சுவாமிகள் கலந்து கொண்டார். நேற்று கடைசி ஞாயிறு விழா நடந்தது. காலை 6.30 மணிக்கு பிரம்மகுளத்தில் தீர்த்த வாரியும், காலை 9 மணிக்கு பாலகனுக்கு உபநயனசின தீட்சையும், காலை 9.30 மணிக்கு ஸ்வாமி வீதிலா, மதியம் 12 மணிக்கு அபிஷேகம் நடந்தது. மாலையில் மகா தீபாராதனையும், இரவு பஞ்ச மூர்த்திகள் ஸ்வாமி திருவீதி உலா நடந்தது.