கால பைரவாஷ்டமி சிறப்பு பூஜை பக்தர்கள் திரளாக தரிசனம்!
சேலம் : சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உட்பட சிவன் கோவில்களில் நேற்று நடந்த கால பைரவாஷ்டமி சிறப்பு பூஜையில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
கால பைரவாஷ்டமியை முன்னிட்டு, சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள கால பைரவர் சன்னதியில், சிறப்பு பூஜைகள், நேற்று நடந்தது. காலையில், விநாயகர் பூஜை, புன்யாகவாசனம், பஞ்சகவ்யம், கலச ஆராதனம், அக்னி கார்யம், மூலமந்திர ஹோமம், மாலா மந்திர ஹோமம், காயத்திரி ஹோமம் ஆகியன நடந்தது.
தொடர்ந்து, கலசாபிஷேகம், மஹா தீபாராதனை, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், விசேஷ அபிஷேகம், அலங்காரம், மஹாதீபாராதனை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
சேலம் ஊத்துமலை முருகன் கோவிலில் உள்ள காலபைரவர் தனிக் கோவிலில், கால பைரவாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஹோமம், பூஜைகள் நடந்தது. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், 1,008 சிவாலயம், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், சேலம் காசிவிஸ்வநாதர் கோவில், பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்கள், முருகன் கோவில்களில் கால பைரவர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.இதில், பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.