உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவில்களில் அனுமன் ஜெயந்தி: திரளான பக்தர்கள் தரிசனம்!

திருத்தணி கோவில்களில் அனுமன் ஜெயந்தி: திரளான பக்தர்கள் தரிசனம்!

திருத்தணி: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஆஞ்சநேயர் கோவில்களில், நேற்று, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. திருத்தணி அடுத்த, நல்லாட்டூர் பகுதியில் அமைந்துள்ள வீரமங்கள ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, லட்சார்ச்சனையும், கலச ஊர்வலமும் நடந்தன. முற்பகல் 11:00 மணிக்கு, மூலவர் ஆஞ்சநேயருக்கு கலசநீர் ஊற்றி, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், வடைமாலை, மலர் அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, ஆன்மிக சொற்பொழிவும், அரிகதை நிகழ்ச்சியும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதே போல், திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, காலை 9:00 மணிக்கு, மூலவருக்கு பாலாபிஷேகம், அலங்காரம் மற்றும் வடைமாலை அணிவித்து தீபாராதனை நடந்தது. இதே போல், திருத்தணி அடுத்த தலையாரிதாங்கல் கிராமத்தில் உள்ள, சாய்பாபா கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !