அரவணை விவகாரத்தில் சிக்கல்: தேவசம்போர்டு புது முடிவு!
சபரிமலை: அரவணை தயாரிப்பில் கேரள அரசின் உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகளின் பிடி இறுகி வருகிறது. இதனால் மைசூரில் உள்ள மத்திய அரசின் உணவு ஆராய்ச்சி மையத்தின் உதவியை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நாடியுள்ளது. சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதம் அரவணை. கேரள ஐகோர்ட் உத்தரவின் படி மாநில அரசின் உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் இங்கு தயாரிக்கப்படும் அரவணையை ஆய்வு செய்து வருகின்றனர். அரவணையில் தண்ணீரின் அளவு 10 சதவீதத்தக்கு கூடுதலாக இருந்தால் அதை விற்பனைக்கு அவர்கள் அனுமதிப்பதில்லை. இதை எதிர்த்து தேவசம்போர்டு தரப்பில் கேரள ஐகோர்ட்டில் தேவசம்போர்டு மனு தாக்கல் செய்தது. அதில் இனிப்பின் அளவு 60 சதவீதத்தக்கு அதிகமாக இருக்கும் போது நீர்தன்மை 16 சதவீதம் வரை இருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதை உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் மறுத்தனர். இதை தொடர்ந்து தண்ணீரின் அளவு 10 சதவீதத்தக்குள் இருக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. இதனால் அரவணை தயாரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. கூடுதல் நேரம் அடுப்பில் வைப்பதுடன், கூடுதல் நேரம் குளிரவும் வைக்க வேண்டியுள்ளது. ஒரு அளவுக்கு மேல் கட்டியாகி விட்டால், பேக்கிங் மெஷினில் அரவணை சிக்கி விடுகிறது. இதனால் உற்பத்தி குறைந்து தற்போது ஒருவருக்கு மூன்று டின் அரவணை மட்டுமே வழங்கப்படுகிறது. தங்களுக்கு வேண்டிய பிரசாதம் கிடைக்காத போது பக்தர்கள் அடிக்கடி இங்கு சரணகோஷம் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். எனவே சபரிமலை தேவசம்போர்டு செயலாளர் ஜோதிலால் அரவணை தயாரிப்பை பார்வையிட்டார். கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட அரவணை பல மாதங்களாகியும் கெடவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்த விஷயத்தில் மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மைய உதவியை நாடியுள்ளதாக தெரிவித்தார். இந்நிறுவனத்தின் இயக்குனர்களான ராம், ரேணு ஆகியோரிடம் அரவணை பற்றி விபரமான அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் கூறினார். அறிக்கை கிடைத்த பின் அதை ஐகோர்ட்டில் சமர்ப்பித்து, புதிய உத்தரவு பெற தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.