மண்டல பூஜை திருவிழா கலை நிகழ்ச்சிகள் துவக்கம்!
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வெங்கடேசா காலனி ஐயப்ப சுவாமி கோவிலில், மண்டல பூஜை திருவிழாவையொட்டி, கலை நிகழ்ச்சிகள் நேற்று துவங்கியது. பொள்ளாச்சி வெங்கடேசா காலனி ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன் கோவிலில், மண்டல பூஜை திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. விழாவையொட்டி, இரவு 7:00 மணிக்கு வருங்கால பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். இதில், பல்வேறு மாணவர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, நேற்று இரவு 7:00 மணிக்கு இன்னிசை கச்சேரி நடந்தது. தொடர்ந்து, இன்று காலை 11:30 மணிக்கு மகேஸ்வர பூஜையும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு மலர் அலங்காரத்தில் வான வேடிக்கையுடன் அம்மன் அலங்கார வேடமிட்ட பக்தர்களுடன் ஐயப்ப சுவாமி பரிவார மூர்த்திகள் தேர்த் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஐயப்ப சுவாமி கோவில், ஐயப்பா சேவா சங்கம், ஐயப்பா சேவா அணியினர் செய்து வருகின்றனர்.