உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சஷாங்க் கச்சேரியில் பூர்விகல்யாணி அதிர்ஷ்டக்காரி!

சஷாங்க் கச்சேரியில் பூர்விகல்யாணி அதிர்ஷ்டக்காரி!

பிரம்ம கான சபாவின் மார்கழி இசை விழாவில், இளைஞர் சஷாங்கின் புல்லாங்குழல் கச்சேரி நடந்தது. அக்கரை சுப்புலட்சுமி வயலின், ஆனந்த் அனந்த கிருஷ்ணன் மிருதங்கம்; மூவரும் இளம் தலைமுறை. சஷாங்க், புல்லாங்குழல் மாலிக்கு வாரிசு. கர்நாடக சங்கீதம் வளர்ந்திருக்கிறதா, அழிந்து கொண்டிருக்கிறதா என்ற பட்டிமன்றம் நடத்துவதைவிட, இப்படி ஒரு இளைஞர் அணியின் கச்சேரியைக் கேட்டால், அந்த சர்ச்சைக்கே இடமில்லை. நான் அரங்கத்திற்குப் போனபோது கேட்ட கிருதி, ’ஸாரஸமுகி’ என்ற, முத்தையா பாகவதரின் கவுடமல்ஹார் கீர்த்தனை. நாதசிந்தாமணியில், ’எவரனி’யை, தியாகராஜர் புல்லாங்குழலுக்காகவே இயற்றினாரோ என்று எனக்கு தோன்றும். சஷாங்க், உற்சாகத்துடன் அந்தப் பாடலை வாசித்துவிட்டு, சவுக்க காலத்தில், காங்கேய பூஷணி (33ம் மேளம்) ராக ஆலாபனை துவங்கினார். புது ராகங்களை அறிமுகப்படுத்தும் இன்றைய இளம் கலைஞர்கள், ரசிகர்களை தவிக்கவிடாமல், ராகத்தின் பெயரை அறிவித்து விடுவது அவர்களது தொடர்புத் திறனை காட்டுகிறது. தியாகராஜரும், இன்றைய இளைஞர்களைப் போல், விவாதி ராகங்களில் பரிசோதனை செய்தவர் தான். கானமூர்த்தி, வாகதீஸ்வரி, நாசிகாபூஷணியில், அவரது கிருதிகள் அமைந்துள்ளதை அதற்கு உதாரணமாக சொல்லலாம். ஒரு உண்மை என்னவெனில், இந்த இரண்டு ’ரி’; இரண்டு ’க’; இரண்டு ’த’; இரண்டு ’நீ’ பிரயோகங்கள் சோகமாக, மன்றாடுதலாக ஒலிக்கும். காங்கேய பூஷணியில், ’எவ்வரே ராமையா’ என்ற கீர்த்தனையில், ’பக்தர்களைக் காப்பதில் உனக்கு நிகர் யாரையா ராமா’ என்று ராமனிடம் இறைஞ்சுகிறார். பின், ஒரு விறுவிறுப்பான, ’விடஜாலதுரா’ ஜனரஞ்சனியில். அப்புறம் நேயர் விருப்பம். நேயர்களின் சீட்டு அல்ல. நேயர்கள் விரும்புவது கல்யாணியா, பூர்வி கல்யாணியா? அதன்பின் நாடாளுமன்ற சபாநாயகர் கேட்பதுபோல் கேள்வி. இரண்டிற்கும் குரல் கள் எழுந்தாலும், ’மக்கள் பூர்விகல்யாணியையே விரும்புகின்றனர்’ என்று, சஷாங்க் சபாநாயகர் போல் அறிவித்து, பூர்வி கல்யாணி ராகம் வாசித்தார். ராகம், தானம், பல்லவியா, கிருதியா என்பது அடுத்த கேள்வி. மக்கள் கிருதிக்கே ஓட்டளித்ததால், ’பரமபாவனாராமா’ என்ற பூச்சி ஸ்ரீநிவாசய்யங்காரின் கிருதியை மெய்மறக்க வாசித்து, ’கனகாம்பரதர’வுக்கு நிரவல் ஸ்வரம் வாசித்தார். அக்கரை சுப்புலட்சுமி, வயலினில் இந்துஸ்தானி பாணியை அவ்வப்போது காட்டினார். இளைஞர் ஆனந்த், தன் இளமை முறுக்குடன், சொற்களை முத்துமுத்தாக உதிர்த்தது, கச்சேரிக்கு முத்தாய்ப்பாக, ’ஜகதோத்தாரணா’. பிறகு, ஒரு பேஹாக். அப்புறம், புல்லாங்குழலின் தனிச் சொத்தான, காவடிச் சிந்துவை இசைத்து முடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !