உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனியப்பன் கோவில் திருவிழா: பக்தர்கள் நேர்த்தி கடன்!

முனியப்பன் கோவில் திருவிழா: பக்தர்கள் நேர்த்தி கடன்!

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் திருவிழாவில், 4,000க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனுக்காக, பலியிட்டனர். தர்மபுரி மாவட்டம், பி.அக்ரஹாரத்தில், பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், மார்கழி மாத மத்தியில், முனியப்பனுக்கு விழா எடுக்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், சேலம் மாவட்டம் மேட்டூர், மேச்சேரி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்குள்ள முனியப்பனை வழிபாடு செய்து வருகின்றனர். தங்களது நேர்த்தி கடனுக்காக, முனியப்பனுக்கு ஆடு, கோழி உள்ளிட்டவற்றை பலியிடுகின்றனர்.முனியப்பன் கோவில் வருடாந்திர திருவிழா நேற்று தொடங்கியது. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக, வழக்கமான நேரத்தை விட சற்று தாமதமாக, முனியப்பன் கோவிலுக்கு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள், பைக்குகள் மூலம் பக்தர்கள் வந்தனர். காலை 10 மணியில் இருந்து, பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து, பி.அக்ரஹாரம் பஸ்ஸ்டாப்பில் இருந்து கோவில் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முனியப்பனை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டு சென்றனர். மதியம் 2 மணி வரை, 2,300 ஆடுகள் மற்றும் 1,700 கோழிகளுக்கு மேல், பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனுக்காக, முனியப்பனுக்கு, பலியிட்டனர்.முனியப்பன் கோவில் திருவிழாவின், இரண்டாவது மற்றும் இறுதி நாளான இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதிகளவில் ஆடு, கோழிகளை பலியிடுவர் என்று, விழாக்குழுவினர் தெரிவித்தனர். விழாவை முன்னிட்டு, போலீஸார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !