விற்பனைக்கு தயாரிக்கப்படும் அரவணையில் ஐயப்பனுக்கு நைவேத்யம்!
சபரிமலை: விற்பனைக்காக தயாரிக்கப்படும் அரவணையும் ஐயப்பனுக்கு நைவேத்யம் செய்யப்படுகிறது. இதன் மூலம் பக்தர்கள் நீண்டநாள் விருப்பம் நிறைவேறியுள்ளது. சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதம் அரவணை. ஐயப்பனுக்கு மதியம் நடைபெறும் உச்சபூஜையின் போது அரவணை நைவேத்யம் செய்யப்படுகிறது. இதற்காக கோயில் அருகில் உள்ள மடப்பள்ளியில் கீழ்சாந்திகள் அரவணை தயாரிக்கின்றனர். பூஜைக்கு பின்னர் இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக சன்னிதானத்தின் வலது புறம் அமைக்கப்பட்டுள்ள பிரசாத பிளான்டில் தனியாக அரவணை தயாரிக்கப்படுகிறது. ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யும் நெய் முக்கியமாக இதில் சேர்க்கப்படுகிறது. இந்த அரணையையும் ஐயப்பனுக்கு நைவேத்யம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பிளான்டில் தயாரிக்கப்படும் அரவணையும் ஐயப்பனுக்கு நைவேத்யம் செய்யப்படுகிறது. தயாரிக்கப்படும் ஒவ்வொரு செட் அரவணையிலும் சிறிதளவு எடுத்து செல்லப்பட்டு உச்சபூஜையின் போது நைவேத்யம் செய்யப்படுகின்றது. மண்டல காலத்தின் கடைசி கட்டத்தில் அரவணைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு பக்தருக்கு இரண்டு டின் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. பின்னர் கடைசி இரண்டு நாட்களில் இந்த கட்டுப்பாடு விலக்கப்பட்டது. மகரவிளக்கு காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபரிமலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.