திருச்செந்தூர் முருகன் கோயிலில் குழந்தைகளை பறி கொடுக்கும் பக்தர்கள்!
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தொடர்ந்து தங்களது குழந்தைகளை பறி கொடுத்து வருகின்றனர். கண்டு பிடிக்க வேண்டிய போலீசாரோ மெத்தனப்போக்கில் உள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் குழந்தைகளை திருடி கடத்தும் கும்பலின் செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகளை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த ராஜதுரை, பாலசுபா தம்பதியரின் மகன் சரண்,4. இவர்கள் ஆங்கிலப்புத்தாண்டு அன்று திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை தந்தனர். சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் போது, கூட்ட நெரிசலில் மகன் சரணை காணவில்லை. இது குறித்து கோயில் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இன்று வரை பையன் கிடைக்கவில்லை.
இரண்டாவது சம்பவம்: திருச்சி காட்டூரை சேர்ந்த இளங்கோவன், சுதா தம்பத்தியரின் மகள் அஷ்வினி, 3. இவர்கள் அனைவரும் ஜன., 3 ம் தேதி கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணி வரை இருந்த மகள் அஷ்வினியை விடிந்த போது காணவில்லை. இது குறித்தும் கோயில் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இன்று வரை கண்டு பிடிக்கப்படவில்லை.
ஆறு மாதத்திற்கு முன் சம்பவம்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆணையூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன், கணபதி தம்பதியரின் மகள் மனிஷா,3. இவர்கள் அனைவரும் 2014 ஜூன் 12, ல் கோயில் வசந்த மண்டபத்தில் படுத்திருந்தனர். அதிகாலை கண்விழித்து பார்த்த போது மனிஷாவை காணவில்லை. இவர்களும் புகார் செய்திருந்தாலும், இன்று வரை குழந்தையை பற்றிய தகவல் இல்லை. தூத்துக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் பாலத்திற்கு அடியில்,2014 ஜூன் 26 ல் ஆறு மாத குழந்தை திவ்யாவுடன் தாய் காமாட்சி படுத்திருந்தார். அவருடைய குழந்தையை யாரோ திருடி சென்று விட்டனர். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளை திருடி கடத்தும் கும்பல் செயல்பட்டு வருகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்வதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக, விட்டு விடுகின்றனர். பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை பறிகொடுத்த ராஜதுரை கலெக்டர் ரவிக்குமாரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் திருச்செந்தூர் கோயில் பகுதியில் ‘சிசிடி’ கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும். காணாமல் போன குழந்தைகளை கண்டு பிடித்து தர வேண்டும், என அதில் தெரிவித்துள்ளனர். போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?