பவானீஸ்வரர் கோவிலில் பக்தி பரவசத்தில் தேர் இழுத்த தோடரின மக்கள்!
ஊட்டி : ஊட்டி பர்ன்ஹில் பவானீஸ்வரர் கோவிலின், 114ம் ஆண்டு ஆருத்ரா தரிசன விழாவில், தோடரின மக்கள் பங்கேற்று, பக்தி பரவசத்துடன் தேர் இழுத்து வழிப்பட்டனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி- எம்பாலடா செல்லும் சாலையில் பவானீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பவானி நதி தீர்த்தத்தில் அமைந்திருப்பதால், பவானீஸ்வரர் கோவில் என்று பக்தர்களால் போற்றப்படுகிறது.கடந்த, 1910ம் ஆண்டு முதல் இந்த கோவிலில் நடராஜ பெருமானின் ஆருத்ரா தரிசன மகோற்சவ விழா, ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.நடப்பாண்டுக்கான ஆருத்ரா தரிசன மகோற்சவ விழா, நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது, விழாவை முன்னிட்டு, நேற்று தேர் ஊர்வலம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் பவானீஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்த தேர் ஊர்வலம் பவானீஸ்வரர் கோவிலில் இருந்து தொடங்கி, ஊட்டி மத்திய பஸ்நிலையம், மெயின் பஜார், மாரியம்மன் கோவில், கமர்சியல் சாலை, வேணு கோபால்சாமி கோவில், மணிக்கூண்டு, லோயர் பஜார், சுப்பிரமணிய சுவாமி கோவில் வழியாக மீண்டும் பவானீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது.முன்னதாக, தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய ஆடைகளை அணிந்து கொண்டு பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியுடன் வந்தனர். இது குறித்து தோடரினத்தை சேர்ந்த சத்தியராஜ் கூறுகையில்,""ஊட்டியில் இன்று நடக்கும், 114வது ஆண்டு விழாவில், தோடரின மக்கள் அனைவரும் திரளாக பங்கேற்று சிறப்பித்தோம். இதுவும் எங்கள் மக்களின் முக்கிய ஆன்மிக நிகழ்வாகும், என்றார்.இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர், நீலகிரி மலை வாழ் தோடர் இன மக்கள் செய்து இருந்தனர்.