சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடக்கிறது. விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் இரவு 7:00 மணிக்கு சிவகாமி அம்மன் திரு ஊஞ்சல் உற்சவம், திருமாங்கல்ய நோன்பு நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை அதிகாலை 3:00 மணிக்கு ஸ்ரீ நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை இடம்பெற்றன. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம், சிவகாமி அம்மையுடன், நடராஜப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்று மாலை 6:00 மணிக்கு மகா அபிேஷகமும் நடக்கிறது. பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜருக்கு அபிேஷக அலங்கார பூஜையும், மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், ஆருத்ரா தரிசன பூஜையும் நடந்தது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.