உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

சிவகாசி கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

சிவகாசி : சிவகாசி மற்றும் வத்திராயிருப்பு பகுதி கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவகாசியில் சிவன் கோயில், சிவ சுப்பிரமணியசுவாமி கோயில், கடைக்கோயில் ஆகிய மூன்று கோயில்களில் இருந்து செவந்திப்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் புறப்பட்டது. சிவன் கோயில் தேரில் நடராஜர் சிவகாமி அம்பாள், சிவசுப்பிரமணியசுவாமி கோயில் தேரில் நடராஜன், சிவகாமி அம்பாள், கடைகோயில் தேரில் பத்திரகாளியம்மன், மாரியம்மன் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தனர். இதுபோல் காமாட்சி அம்மன், முத்துமாரியம்மன் தேரில் வலம் வந்தனர். ஏராளமான மக்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஆருத்ரா தரிசனத்தை யொட்டி பெண்கள் செவ்வந்திப்பூ மாலை சூடி மகிழ்ந்தனர். வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் நடராஜருக்கும், சிவகாமிஅம்மனுக்கும் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது. கோயில் மையமண்டபத்தில் உற்சவருக்கும், அம்மனுக்கும் களி படையல் வழிபாட்டுடன் தேவாரம், திருவாசகம் பாராயணம் நடந்தது. தொடர்ந்து சுவாமி பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா சென்றார்.

சிவகாசி நாடார் உறவின்முறை மற்றும் பாண்டியநாடார் உறவின்முறை கோயில்களில் திருவாதிரை விழாக்கள் கொண்டாடப்பட்டது. மூவரைவென்றான் மரகதவல்லி சமேத மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் திருவாதிரை விழா கோலாகலமாக நடந்தது. சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சந்தனக்காப்பு நடந்தது. வத்திராயிருப்பு சங்கிலிமாடன், மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் கோயிலில் நடந்த திருவாதிரை விழாவில் மூலவருக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பரிவார தெய்வங்களுடன் பூஜைகள் நடந்தது. பின்னர் மூலவர் விபூதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !