மன்னார்சாமி கோவில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம்!
திண்டிவனம்: திண்டிவனம் மன்னார்சாமி கோவில் திடலில் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திண்டிவனம் நல்லியகோடன் நகர் அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கறவைகள் பின் செல்லும் விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு, கோவிலில் இருந்து உற்சவர் சிலைகள் விழா திடலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். தொடர்ந்து 6 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. சென்னை அருண் ஸ்ரீராம் சார்பில் கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சியும், திண்டிவனம் நம்மாழ்வார் சபை தலைவர் வெங்கடேசன் பக்தி பிரசங்கமும் நடந்தது. தென்களவாய் கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் திருக்கல்யாண பூஜைகளை நடத்தினர். பெண்களுக்கு மங்கல பொருட்கள் தாம்பூலமும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கினர். ஏற்பாடுகளை மன்னார்சாமி கோவில் ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண கமிட்டியினர் செய்திருந்தனர்.