உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆல்கொண்டமால் திருவிழாவில் வாண வேடிக்கை கோலாகலம்

ஆல்கொண்டமால் திருவிழாவில் வாண வேடிக்கை கோலாகலம்

உடுமலை : உடுமலை அருகே பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் திருவிழா நேற்றுமுன்தினம் வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது; பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.

உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட சோமவாரப்பட்டியில் உள்ள ஆல்கொண்டமால் கோவிலில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை ஒட்டி, கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டுக்கான திருவிழா, கடந்த 16ம் தேதி காலை 5:00 மணிக்கு, சிறப்பு பூஜையுடன் துவங்கியது. சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பால் கொண்டு வந்து சுவாமிக்கு படைத்து வழிபட்டனர். 17ம் தேதி, காலை 5:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. காலை முதல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். மாடு, காளை, நாய், ஆடு உள்ளிட்ட உருவபொம்மைகளை கோவில் வளாகத்தில் வைத்தும், தங்கள் கால்நடைகளிலிருந்து பெறப்பட்ட பாலினால் அபிேஷகம் நடத்தியும் பக்தர்கள் வழிபட்டனர். சலகெருது ஆட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவையும் நடந்தது. திருவிழா நிறைவு நாளான நேற்றுமுன்தினம் காலை 5.00 மணிக்கு ஆல்கொண்டமாலுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு 7.00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் ஆல்கொண்டமால் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வாணவேடிக்கை நிகழ்ச்சி: திருவிழாவை முன்னிட்டு, பெதப்பம்பட்டி, ஒய்.சி.சி., கிரிக்கெட் கிளப் சார்பில், பெதப்பம்பட்டி - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. டி.எஸ்.பி., பிச்சை தலைமை வகித்தார். குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் துவக்கி வைத்தார். குடிமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !