உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோலைமலை முருகன் கோயிலில் முதல்முறையாக பிரம்மோற்சவ திருவிழா!

சோலைமலை முருகன் கோயிலில் முதல்முறையாக பிரம்மோற்சவ திருவிழா!

அழகர்கோவில் : அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் முதல் முறையாக 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ திருவிழா ஜன.25ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.சோலைமலை முருகன் கோயில் பல நுாறு ஆண்டுகளுக்கு முன் ஆதிவேல் வடிவில் மலை மீது அமையப்பெற்றது. 1960ல் சிறிய கோயில் அமைத்து வள்ளி, தெய்வானையுடன், சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுமுதல் கோயில் சார்பில் கார்த்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம் என ஒரு நாள் விழாவும், 7 நாள் கந்தசஷ்டி திருவிழாவும் நடக்கிறது.கடந்த ஆண்டு ரூ.5 கோடியில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின் தக்கார் வெங்கடாசலத்தின் முயற்சியால் செம்பு தகடினால் ஆன பழைய கொடிமரம், ரூ.25 லட்சம் மதிப்பில் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்தனர். தற்போது ரூ.ஒரு கோடி மதிப்பில் கோயில் வலது பக்கம் சஷ்டி மண்டபம் அமைக்கும் பணி முடிந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள மூலஸ்தானத்தில் நாளை(ஜன. 23) மகாகணபதி, சண்முகர், உற்சவ சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.இந்த ஆண்டு முதல் கோயிலில் முதல் முறையாக 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ திருவிழா ஜன.25ல் காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் முடிந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஒன்பதாம் விழாவாக பிப்.2ல் தேரோட்டமும், மறுநாள் காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது. நிர்வாக அதிகாரி வரதராஜன் கூறியதாவது:அனைத்து கோயில்களிலும் 10 நாள் திருவிழா நடக்கிறது. சோலைமலை முருகன் கோயிலில் இதுபோன்ற விழா நடக்கவில்லையே என பக்தர்களிடம் ஏக்கம் இருந்தது. தற்போது சஷ்டி மண்டபம் அமைக்கப்பட்டதால் முதல்முறையாக திருவிழா நடக்கிறது. கோயிலில் தேரோட்டம் நடத்துவதற்கு இடம் இல்லை. அதனால் பிப். 2ல் தங்கத் தேரோட்டம் நடக்கிறது. பக்தர்கள் அனைவரும் தங்கத் தேரை வடம் பிடித்து இழுக்கலாம், என்றார்.ஏற்பாடுகளை கோயில் பட்டர் பாலகணபதி தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !