கோவில் கும்பாபிஷேக திருப்பணி பாலாலய பூஜையுடன் தொடக்கம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி, பாலாலய பூஜையுடன் தொடங்கியது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் மீண்டும் கும்பாபிஷேகம், நடத்திட ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்காக கோவிலில் உள்ள, ஒன்பது கோபுரங்கள், சன்னதிகளை புதுப்பிக்கப்படும். பணிகள் நடைபெறும்போது பணியாளர்கள் தூய்மை செய்பவர்கள், முதல் கட்டமாக ராஜகோபுரம் உள்ளிட்ட, ஒன்பது கோபுரங்களை புதுப்பிக்க பாலாலய பூஜை நேற்று அதிகாலை, 5.30 மணிக்கு நடந்தது. தொடர்ந்து, கிளிகோபுரத்தில் பணிகள் முதன் முதலில் துவக்கப்பட்டது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் சம்பந்த விநாயகர் ஆலயத்தில் கணபதி ஹோமத்துடன் கோவில் வளாகத்தில் நவக்கிரக யாகசாலை அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்கி, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன், கலெக்டர் ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.