மாசாணியம்மன் குண்டம் திருவிழா: பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு!
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவில் செல்லும் கான்கிரீட் ரோட்டில் காணப்பட்ட பழுதுகளை சரிசெய்யும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கியது. வரும் பிப்., 5 ம்தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான முதற்கட்ட வேலைகள் துவங்கியுள்ளன. கோவில் சார்பில், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. புதிய நுழைவாயில் பகுதியிலிருந்து கோவில் வரை உள்ள கான்கிரீட் ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. தற்போது ஆனைமலை பேரூராட்சி சார்பில் அதில் பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் கூறுகையில், புதிய ஆர்ச் பகுதியில் ரோடு மோசமாக இருந்தது. சப்-கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இதனை சரிசெய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. குண்டம் திருவிழாவினை முன்னிட்டு பழுது பார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன, என்றார்.