200 ஆண்டுகளுக்கு பின் திருநீலக்குடி கோவில் மகா கும்பாபிஷேகம்
கும்பகோணம்: திருநீலக்குடி சோழீஸ்வரமுடையார் கோவில், 200 ஆண்டுகளுக்கு பின் திருப்பணி செய்து, கும்பாபிஷேகத்தை நடந்தது. கும்பகோணம் அருகே உள்ள திருநீலக்குடியில், வேதாந்தநாயகி உடனாய சோழீஸ்வரமுடையார் கோவில் உள்ளது. பழமையும், பெருமையும் வாய்ந்த இவ்வாலயம் நெடுங்காலமாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து, பூஜைகள் இன்றி இருந்தது. காலப்போக்கில் விமானங்கள் சிதைந்த நிலையில் மூலவர், அம்பாள் கருவறைகள் மட்டுமே எஞ்சி நின்றன. இந்நிலையில், கிராமமக்களின் ஒத்துழைப்புடன் திருநீலக்குடி ஊராட்சி தலைவர் முல்லைவேந்தன் தலைமையில், திருப்பணிக்குழு அமைத்து கடந்த, 2012ம் ஆண்டு திருப்பணி தொடங்கப்பட்டது. பல லட்சம் செலவில் அனைத்து மண்டபங்களும் சீரமைக்கப்பட்டு, தனியார் ஒருவரால் பாதுகாக்கப்பட்ட நந்தி, மீண்டும் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அனைத்து திருப்பணிகளும் நிறைவுற்று, கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள் முன்னிலை வகித்தார். யாகசாலை மற்றும் கும்பாபிஷேக பூஜைகளை பாலாமணி சிவாச்சாரியார் தலைமையில், 20க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர். விமான கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மூலவர் அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.