பழநி தைப்பூசம் இரண்டாம் நாள்!
நம்மை மனக்கவலைகளில் இருந்து மீட்டு, சுமையைத் தானே ஏற்றுக்கொள்ளும் கருணை தெய்வமாக விளங்குபவர் கந்தப்பெருமான். கந்தன் என்றால் பகைவர்களின் பராக்கிரமத்தை வற்றச் செய்பவர் என்று வடமொழி நிகண்டு பொருள் கூறுகிறது. பகைவர் என்றால் எங்கோ வெளியில் இருந்து வருபவர் அல்ல. நம் மனமே நமக்குப் பகையாக இருக்கிறது. தேவையில்லாததை எல்லாம் சிந்திக்கிறது. இந்த மனப்பகைவனிடம் இருந்து நம்மைக் காப்பவன் கந்தன். கந்து என்றால் யானையைக் கட்டிப்போடும் தறி. உயிர்கள் என்னும் யானைகளை ஆசைகளில் இருந்து மீட்டு அவர்களைக் கட்டிப் போடுபவன் என்பதால் அவர் கந்தன் ஆனார். கந்து என்ற சொல்லுக்கு பற்றுக்கோடு என்ற பொருளும் இருக்கிறது. பழநியிலுள்ள கந்தப்பெருமானை பற்றிக் கொண்டால், வாழும் காலத்தில் செல்வச்செழிப்பும், அதன்பின் பிறவிச்சுழலில் இருந்து மீளும் நன்மையையும் பெறுவார்கள். இன்று பழநி முத்துக்குமார சுவாமி காலையில் தந்தப் பல்லக்கிலும், இரவில் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்திலும் வள்ளி, தெய்வானையுடன் பவனி வருகிறார். தரிசிக்க கிளம்புவோமா!