உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறம் வளர்த்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

அறம் வளர்த்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

குறிச்சி : குனியமுத்துாரிலுள்ள அறம் வளர்த்த மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

விழா கடந்த, 30ம் தேதி மங்கள இசை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்டவைகளுடன் துவங்கியது. அன்று மாலை, முதல் கால யாக பூஜை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடந்தன. 31ம் தேதி, இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, உபசார பூஜை, விமான கலசம் வைத்தல், யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடந்தன.நேற்று காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து கலசங்கள் கோவிலை வலம் வருதலும் நடந்தன.

9:15 மணிக்கு, மாரியம்மன் விமான கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, மாரியம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், தசதானம், தசதரிசனம், மகாபிஷேகம், அலங்கார பூஜையும், அன்னதானமும் நடந்தன.

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, பேரூராதினம் இளைய பட்டம் மருதாசல அடிகள் உள்பட பலர் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். மாலையில், அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று முதல், 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, 21 சமூகத்தார் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !