புண்ணிய பூமி ராமேஸ்வரம்!
தர்மங்கள் முக்கியமானவை. ஜடாதீர்த்தத்தின் அருகே புத்தகங்கள் தானம் செய்யப்படும் ஐதீகம் இருப்பதை பார்த்தோம். தீர்த்தங்கள் என்றால் குளங்கள் தான் என்பதில்லை. குளங்களை போலவே நீர் ஊற்றுகள், சுனைகள், கிணறுகள் கூட தீர்த்தங்கள் தாம்.
ராமரது சேனையை சேர்ந்த ஜாம்பவான், சுக்ரீவன், அங்கதன் ஆகியவர்கள் பெயராலான தீர்த்தங்கள் கந்தமாதன பர்வதத்திலிருந்து வரும் வழியில் உள்ளன. ஜாம்பவான் தீர்த்தம், அங்கத தீர்த்தம், சுக்ரீவன் தீர்த்தம் ஆகியவை விவேகானந்த கேந்திரத்தினரால் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. திரௌபதி தீர்த்தம், நகுலதீர்த்தம், சகாதேவ தீர்த்தம், பீமதீர்த்தம், அர்ஜுனன் தீர்த்தம் மற்றும் தர்மர் தீர்த்தம் ஆகியவையும் விவேகானந்த கேந்திரத்தினரால் சீர்படுத்தப்பட்டு இன்று நீர்நிரம்பி காணப்படுகின்றன. திரௌபதி
தீர்த்தம் அழியும் நிலையில் இருந்தது. அது கண்டுபிடிக்கப்பட்டு பாதிப்புகள் அகற்றப்பட்டு சரி
செய்யப்பட்டது. மணல் மண்டி விட்டிருந்த தர்மதீர்த்தத்தினை தோண்டி எடுத்தே உயிர்ப்பித்தனர் கேந்திர பணியாளர்கள். இந்த தீர்த்தத்தின் வயது குறைந்த பட்சம் 500 ஆண்டுகள்.
புதையுண்ட இடம்: பசுமை ராமேஸ்வரத்தின் மக்கள் தொடர்பு சேவைகளை நிர்வகித்த சரஸ்வதி முயற்சியால் மக்கள் ஒத்துழைப்புடன் தீர்த்தம் புதையுண்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மாதம் முழுக்க தோண்டுவதும் ஆறாயிரம் டிராக்டர் லோடுகளில் மணலை அகற்றுவதுமாக கழிந்த பின்னர் குளம் தெளிவாக தெரிந்தது.
இந்த நீர்நிலைகளை உருவாக்கியவர்களுக்கு இந்த தீவின் அமைப்பு இந்த தீவின் மழைநீர் எவ்விடங்களில் தேங்கும்? எந்த இடங்களில் சேகரிக்க முடியும் என தெரிந்திருந்தன. இல்லாவிட்டால் இத்தனை நூற்றாண்டுகளுக்கு பிறகும் கூட பருவ மழை வரும்போது கச்சிதமாக அந்தநீரை இந்த நீர்நிலைகள் சேகரித்து நிலத்தடி நீரை பெருக்கிட இயலுமா? நீர்நிலைகளை புனருத்தாரணம் செய்து விட்டது சாதனை. ஆனால் நாம் மறந்து போன பாரம்பரிய நம்பிக்கைகளை மீட்டு அதன் மூலமாக நீர்நிலைகளை காக்கும் கடமையை உருவாக்குவது முக்கியமானது. அதுவே பசுமை ராமேஸ்வரத்தின் புரட்சியாக இருக்கும்.