300 ஆண்டுகள் பழமையான சூலக்கல் கோவில் புதுப்பிப்பு பணி விறுவிறு!
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சூலக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவிற்காக, புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதில், தற்போது, திருத்தேர் பணிகள் மற்றும் கொடி மரம் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு ஒன்றியத்தில் அமைந்துள்ளது சூலக்கல்.
இந்த ஊரில், பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், கருவறையில், வடக்கு திசை பார்த்த சூலாயுத வடிவில் அம்மன் சுயம்புவாக
தோன்றுவது இங்கு மட்டும் தான். இதனால், இக்கோவில் தனித்துவம் பெற்றுள்ளது. கிழக்கு திசை நோக்கி விநாயகரும், வடக்கு மூலஸ்தானத்தில், உற்சவ மூர்த்தி சன்னதிகளும் உள்ளன. 10 அடி உயரமுள்ள குதிரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு வருபவர்களுக்கு நல்லதே நடப்பதாகவும்; வயிற்றுவலி, வயிற்று போக்கு, வாந்தி போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு வந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால், உடனே குணமாகிறது.
அம்மை நோயால், பாதிக்கப்பட்டவர்கள், கை, கால் வலி, குழந்தையின்மை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உருவ பொம்மை செலுத்தி வழிபாடு செய்வதால், இப்பிரச்னைகளும் தீரும் என்பது ஐதீகமாக உள்ளது.
ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழா மூன்று நாட்கள் நடக்கும் போது, கிராமமே களை கட்டும். பல்வேறு பகுதியிலிருந்து லட்சக்கணக்காக பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இந்த கோவிலில், கும்பாபிேஷக விழா கடந்த, 1994ம் ஆண்டு நடத்தப்பட்டது. பின், போதுமான புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளாததால், உள்கட்டமைப்பு, மண்டபம், சுற்றுச்சுவர் அனைத்தும் சிதிலமடைந்து காணப்பட்டது. புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளாததால், கும்பாபிேஷகமும் நடைபெறவில்லை. புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளாமல், சிதிலமடைந்து கோவிலிலேயே பூஜைகள் நடந்து வந்தன.
மேலும், தேரும் கரையான் அரித்து பழுதானதால், தேர்த்திருவிழாவும் நடைபெறவில்லை.
இக்கோவிலை புனரமைக்கவும்; தேரை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், பணிகள் வேகப்படுத்தப்படாததால், கும்பாபிேஷகம் நடைபெறுவது தாமதமாகி வருகிறது. இப்பணிகளை விரைவுப்படுத்தி கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. தற்போது, மீண்டும் பணிகள் துவங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது.
கோவில் வளாகம் முழுவதும் வர்ணம் பூசும் பணிகள் முடிவுற்ற நிலையில், கொடி மரம்
அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த, 94ம் ஆண்டு அமைக்கப்பட்ட கொடி மரம்
பராமரிப்பின்றி இருந்ததால், அவை அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக, 30 அடி உயரம் கொண்ட
கொடிமரம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக கோவில் வளாகத்தில், கொடி மரம் அமைப்பதற்காக பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருத்தேர் பணிகள் : கோவிலில், அம்மன் திருத்தேர் புதியதாக செய்ய முடிவு செய்யப்பட்டு, 27 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அனுமதி பெறப்பட்டுள்ளது. தற்போது திருத்தேர் பணிகளும் நடந்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக இப்பணிகள்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்பார்ப்பு : கும்பாபிேஷக விழாவையொட்டி, திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விரைவில் கும்பாபிேஷகம்!
இது குறித்து இந்துசமய அறிநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சூலக்கல் மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவிலில், அம்மன் விமானம் மற்றும் முன்மண்டபம் ஆகியவை பஞ்சவர்ணம் பூசி கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள், 3 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி பெறப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, நன்கொடையாளர்கள் மூலமாக ஒரு லட்சத்து, 72 ஆயிரம் ரூபாய் செலவில், கொடிமரம் அமைக்கப்பட உள்ளது. பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, கும்பாபிேஷக விழா நடத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.