திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தங்க கவசம் அணிவகுப்பு!
புதுச்சேரி: பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், ஸம்வத்சரா அபிஷேக விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி அடுத்த இரும்பை, குபேரன் நகரில், பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு ஸம்வத்சரா அபிஷேக விழா, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நவகலசங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டு, வேதிகார்ச்சனை, மூலமந்திர ஜெபம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரண்டாம் நாளான நேற்று (3ம் தேதி) காலை 7:00 மணியளவில் கலசாபிஷேகம், நவாவரண பூஜை, துாப தீப நெய்வேத்திய உபசாரம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு மேல், பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு, புதிதாக செய்யப்பட்ட தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, நவசக்தி அர்ச்சனை நடந்தது. இதைதொடர்ந்து, கன்னியா, தருணி, சுமங்கலி, சுவாஸினி பூஜைகளும், சுவாமி வீதியுலாவும் நடந்தது. ஏற்பாடுகளை, ஆலய ஸ்தாபகர் கணேஷ் சிவாச்சாரியார் தலைமையில், கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.