உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் தரிசனம்!

ஷீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் தரிசனம்!

திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை, சாய்நகரில் உள்ளது ஷீரடி சாய்பாபா கோவில். இக்கோவிலில், புதியதாக துவாரகணபதி, தத்தாத்ரேயர், சாய்பாபாவின் குருஸ்தானம் மற்றும் பாபா சாவடி, தத்தாத்ரேயர் அவதாரங்களான ஸ்ரீபாத ஸ்ரீவல்லப, ஸ்ரீநரசிம்ம சரஸ்வதி, மாணிக்பிரபு, அக்கல்கோட மகராஜ் (சுவாமி சமர்த்த) மற்றும் ஸ்ரீகஜானன் ஆகிய சன்னிதிகளில், புதியதாக திருவுருவ சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகளுக்கு, மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

விழாவை ஒட்டி, கோவில் வளாகத்தில் மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து, கணபதி, நவக்கிரக, லட்சுமி ஹோமம் உட்பட, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 9:30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, புதிய கோவில் கோபுரம் மற்றும் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு கலச நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. மாலை 3:00 மணி முதல், 6:00 மணி வரை, சீனிவாச ராவ் குழுவினரின் அனுமன் காலீசா பாராயணம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கு சேவையில் சாவடிக்கு வந்தடைந்தார்.

இந்நிகழ்ச்சியில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் கோபால் நாயுடு, நிறுவனர் சாய்சீனிவாசன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !