வேலாயுதசாமி கோவிலில் 3ம் நாள் தைப்பூச தேரோட்டம்!
கிணத்துக்கடவு :கிணத்துக்கடவு வேலாயுதசாமி கோவிலில் மூன்று நாள் தைப்பூச தேரோட்டம் நிறைவு பெற்றது.கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், கடந்த மாதம் 28ம் தேதி தைப்பூச தேரோட்ட விழா கொடியேற்றுத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை வேலாயுதசாமி உற்சவ மூர்த்தி சப்பரத்தில் எழுந்தருளி பலி பீட பூஜையும், பொன் மலையை சுற்றி கிரிவலமும் நடந்தது.
பின், 3ம் தேதி தைப்பூசத்தை ஒட்டி, மாலை 4:30 மணிக்கு வேலாயுதசாமி, வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்தியுடன் தேரில் எழுந்தருள, முதல் நாள் தேரோட்டம் மலை அடிவாரத்தில் துவங்கி, மலையின் அக்னி மூலையான சிவலோகநாதர் கோவில் அருகே தேர் நிறுத்தப்பட்டது.
பின், பிப். 4ம் தேதி இரண்டாம் நாள் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதனை பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ண மன்றாடியார் துவக்கி வைத்தார். அன்று தேர் வடம் பிடித்து இழுத்து சென்று, மலையின் வாயு மூலையான கிருஷ்ணசாமிபுரம் பகுதியில் நிறுத்தப்பட்டது.
மூன்றாம் நாள் தேரோட்டம் கடந்த, 5ம் தேதி மாலை 4:30 மணிக்கு நடந்தது. இதனை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், பரம்பரை அறங்காவலர், பேரூராட்சித்தலைவர் விஜயா கதிர்வேல் ஆகியோர் துவக்கி வைத்தனர். தேர் வடம் பிடித்து இழுத்து வந்து, பொள்ளாச்சி-கோவை ரோட்டிற்கு வந்து, அங்கிருந்து பொன் மலை அடிவாரத்தின் எதிரே தேர் நிலை இரவு 8:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. அப்போது, பொள்ளாச்சி-கோவை வழியாக செல்லும் வாகனங்கள், அரசம்பாளையம் பிரிவு வழியாக சுற்றிவிடப்பட்டது. தேர் நிலைக்கு வந்த பின், போக்குவரத்து சீரடைந்தது. தேர் வரும் வழியில், மின் கம்பங்களின் ஒயர்களை மின்வாரியத்தினர் கழற்றிவிட்டு, தேர் சென்றவுடன் மீண்டும் மின் கம்பத்தில் இணைத்தனர்.
நேற்று மாலை, 6:00 மணிக்கு பரிவேட்டையும், தீர்த்தவாரியும் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு தரிசனம், பலி பீட பூஜையும், இரவு 9:00 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (8ம் தேதி) பகல் 12.00 மணிக்கு மூலவர் வேலாயுதசாமிக்கு மகா அபிஷேகத்துடன் தேரோட்டம் விழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர், செயல் அலுவலர் சந்திரமோகன் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.