உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழுதடைந்த 108 சிவாலயங்களை சீரமைக்க கோரிக்கை!

பழுதடைந்த 108 சிவாலயங்களை சீரமைக்க கோரிக்கை!

கொப்பூர்: கொப்பூர் கிராமத்தில், பழுதடைந்துள்ள, 108 சிவாலயங்களை, சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியத்தில் உள்ளது கொப்பூர் கிராமம். இந்த கிராமம், 250 ஆண்டுகளுக்கு முன், திருக்காப்பூர் என, அழைக்கப்பட்டது. நாளடைவில், இது கொப்பூர் என, மருவிவிட்டது. இந்த கிராமத்தில், 108 சிவாலயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. காலப்போக்கில், அவற்றில் பெரும்பாலானவை அழிந்து விட்டன. அவை இருந்த இடத்தில் வீடுகள் வந்து விட்டன. தற்போது, 10 இடங்களில் மட்டுமே சிவாலயங்கள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. அவையும் முழுமையான கோவில்களாக இல்லாமல், ஆங்காங்கே சிவலிங்கங்கள் மட்டுமே உள்ளன. சில இடங்களில் நந்தியும் காணப்படுகிறது. சிலவற்றில், கருவறை மட்டுமே உள்ளன. எனவே, 108 சிவாலயங்களை கண்டுபிடித்து, அவற்றை சீரமைத்து, தினமும் வழிபடும் வகையில், ஆலயங்கள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; கொப்பூர் கிராமத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, இந்து சமய அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கொப்பூர் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, 108 சிவாலயங்கள் குறித்து அறிக்கை தயாரித்து, அரசுக்கு பரிந்துரைத்து, சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !