உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி கோலாகலம்!

ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி கோலாகலம்!

கோவை : கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானபக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் திரண்டனர்.

கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு கடந்த 10ம் தேதி முதல் மகா சிவராத்திரி விழா கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. முதல் நாள் கொண்டாட்டத்தில் கீதாசந்திரன் பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரண்டாம் நாளில், பண்டிட் தேஜேந்திர நாராயண முகுந்தன் நிகழ்ச்சியும் நடந்தது. மூன்றாம் நாள் விழாவில் பி.வி.சந்திரநாராயணன் கர்நாடக குரலிசையும், நான்காம் நாள் நிகழ்வில் நடந்த பண்டிட் ராஜன் மிஸ்ரா, பண்டிட் சாஜன் மிஸ்ரா ஆகியோரின் இந்துஸ்தானி இசை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் உஸ்தாத் சைபுதீன் சாகரின் நிகழ்ச்சியும், ஏழாம் நிகழ்வில் பாம்பே ஜெயஸ்ரீ வாய்பாட்டும் அனைவரையும் மயக்குவதாக இருந்தது. எட்டாம் நாளாக மகா சிவராத்திரி விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. பஞ்சபூத ஆராதனையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு சிவாச்சாரியர்களின் மந்திர உச்சாடணையுடன் விழா துவங்கியது.

முதல் நிகழ்ச்சியாக ஜிலாக்கானின் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பார்த்திவ் கோகில் இசை நிகழ்ச்சி, சவுண்ட் ஆப் ஈசா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மக்களை துாக்கத்தை மறந்து துள்ளல் போட வைத்தது. நடுநிசி இரவில் மிகவும் சக்தி மிக்க, மகாமந்திர உச்சாடானையுடன் சம்போ மந்திரத்தை சத்குரு மக்களுக்கு வழங்கினார். பல லட்சம் மக்கள் பங்கு பெறும் இந்த விழாவில் இரவு 7:00 முதல் அன்னதானமும், ஈஷா யோகா மையத்துக்கு வந்து செல்ல கோவையிலிருந்து சிறப்பு வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !