உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சிவராத்திரி கோலாகலம்; கோவில்களில் திரண்ட பக்தர்கள்!

மகா சிவராத்திரி கோலாகலம்; கோவில்களில் திரண்ட பக்தர்கள்!

கோவை : மகா சிவராத்திரியை முன்னிட்டு, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில், சுவாமிக்கு, சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் வரும் சிவராத்திரி தினம், மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், சிவபெருமானின் அருள் பெற வேண்டி, சிவன் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.நேற்று, மகா சிவராத்திரி முன்னிட்டு, சிவன் கோவில்களில், மாலை முதலே, சிறப்பு வழிபாடுகள் துவங்கின. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு ஆறு கால பூஜை நடத்தப்பட்டது. காலை, 5:00 மணி முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இரவு, சுவாமிக்கு பஞ்சாமிருதம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு பூஜைகளில் பங்கேற்றனர்.

கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அலங்காரம் மேற்கொள்ளப்பட்டது. பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலிலும் மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டது.வெள்ளலுார் சிவகாமசுந்தரி சமேத தேனீஸ்வரர் கோவிலில், மாலை, 6:௦00 மணிக்கு, அபிஷேக வழிபாடு நடத்தப்பட்டது. மேலும், கலசாபிஷேகமும் நடந்தது.தொடர்ந்து, 8:00 முதல் அதிகாலை, 4:00 மணி வரை, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, மேற்குறிப்பிட்ட திரவியங்களால், அபிஷேக வழிபாடு நடந்தது.இதையடுத்து, அமாவாசை வழிபாடு நடந்தது. அன்னுார், மூலக் குரும்பபாளையம், பத்ர காளியம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று இரவு விநாயகர் கோவிலில் சுவாமி புறப்பாடு நடந்தது.

நாரணாபுரம் ஊராட்சி, வடுகபாளையம், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று மாலை அம்மனுக்கு கொலு வைக்கப்பட்டது. விநாயகர் கோவிலிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள, வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகள் நடந்தன. முதல்கால சிவவழிபாட்டில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ராஜ அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இரவில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.காரமடை, லோகநாயகி அம்பாள் உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், மகாசிவராத்திரி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு சுவாமிக்கு ஐந்து கால சிறப்பு பூஜைகள் நடந்தன. சிவனுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து ஐந்துகால சிறப்பு பூஜைகள் நடந்தன. பெள்ளாதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில், மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !