மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை!
காரிமங்கலம்:காரிமங்கலம், மலைக்கோவிலில் நடந்த மஹா சிவராத்திரி பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காரிமங்கலம், அபிதகுஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரியையொட்டி, நேற்று அதிகாலை முதல் ஸ்வாமிக்கு நான்கு கால சிறப்பு அபிஷேகம் பூஜைகள், அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நான்கு கால பூஜைகளிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் புருசோத்தமன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், சீனிவாசன் ஆகியோர் செய்தனர்.
காவேரிபட்டணம் அடுத்த, பெண்ணேஸ்வர மடத்தில் அமைந்துள்ள வேதநாயகி சமேத
பெண்ணேஸ்வர கோவிலில் மஹாசிவராத்திரியையொட்டி ஸ்வாமிக்கு நான்கு கால சிறப்பு
அபிஷேகம். அலங்காரம் பூஜைகள் நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மோகன் குமார், மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜீணேஸ்வரர் கோவில் நெசவாளர் நகர் மஹாலிங்கேஸ்வரர் கோவில், பாரதிபுரம் காசி விஸ்வநாதர் கோவில், அரூர் தீர்த்தகிரீஸ்வரர் கோவில், புட்டிரெட்டிபட்டி சோமேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதீஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்வாமிக்கு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.